படப்பை, : மணிமங்கலம் ஊராட்சி சுடுகாடு, குப்பையை கொட்டி மூடப்பட்டு வருவதால், ஊராட்சி பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில் மணிமங்கலம் ஊராட்சியில், 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
தாம்பரம் மாநகராட்சியை ஒட்டிய புறநகர் பகுதியாக மணிமங்கலம் அமைந்துள்ளதால், இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.மணிமங்கலம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் அனைத்தும், மணிமங்கலம் ஏரி அருகே பாரதி நகர் பகுதி சுடுகாட்டில் கொட்டப்படுகின்றன. இதனால், சுடுகாடு முழுதும் குப்பை, குவியலாக காணப்படுகின்றன.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், இந்த சுடுகாடை சுற்றிலும் சுற்றுச் சுவர் அமைத்து, வெளி நபர்கள் உள்ளே நுழைய முடியாத வகையில் பராமரித்தனர்.தற்போது ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த குப்பையும் இந்த சுடுகாட்டில் கொட்டப்படுகின்றன. இதனால் சுடுகாடு முழுதும் குப்பை மலையாக காட்சிஅளிக்கின்றன.ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகி உள்ளன. இவற்றை கால்நடைகள் உண்பதால், உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.
மேலும், சூழ்ந்து கிடக்கும் குப்பையால், உடல்களை அடக்கம் செய்ய வருவோர் முகம் சுளித்து வருகின்றனர்.இது குறித்து ஊராட்சி பொதுமக்கள் கூறியதாவது:இறந்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாடை, கிராமங்களில் கோவில்களுக்கு இணையாக பராமரிப்பது வழக்கம். ஆனால், இந்த ஊரில் தான் ஊராட்சி நிர்வாகமே குப்பையை கொட்டி சுடுகாடை சீரழித்து வருகிறது.மாவட்ட கலெக்டர் இந்த சுடுகாட்டின் நிலையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். குப்பையை வேறு இடத்தில் கொட்டவும், இங்குள்ள குப்பையை அகற்றி, சுடுகாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவும் ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.