தாம்பரம் : தாம்பரம்-- - சோமங்கலம் சாலை, சில மீட்டர் துாரத்திற்கு உள்வாங்கியதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா வழியாக, சென்னை புறவழி மற்றும் வெளிவட்ட சாலைகளை கடந்து, சோமங்கலத்திற்கு சாலை செல்கிறது.
இது, முக்கிய சாலை என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, கனரக வாகனங்கள் அதிகம் செல்கின்றன.இச்சாலையை ஒட்டி, பாப்பான் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு செல்கிறது. ஒவ்வொரு மழையின் போதும், சாலையை ஒட்டிய நிலங்களில் வெள்ளம் தேங்கும். அது வடிய பல மாதங்களாகும். இதனால், இச்சாலையில் திடீர் திடீரென 'ஜிக் ஜாக்' பள்ளம் ஏற்படுவதும், சாலை உள்வாங்குவதும், காலம் காலமாக தொடர்கிறது.அதற்கேற்ற வகையில், அடித்தளத்தை பலமாக அமைத்து சாலை போடாததே, இப்பிரச்னை நீடிப்பதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், சென்னை புறவழிச்சாலையை கடந்து செல்லும் போது, சில மீட்டர் துாரத்திற்கு திடீரென சாலை உள்வாங்கியுள்ளது.இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் பயணிக்கின்றனர். இதை சரிசெய்ய வேண்டிய நெடுஞ்சாலைத் துறையினர், யாருக்கு எது நடந்தால் என்ன என்று அலட்சியமாக இருந்து வருகின்றனர்.எனவே, இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை கருத்தில் வைத்து, பெயருக்காக சாலை அமைக்காமல், மீண்டும் இதுபோன்று ஏற்படாத வகையில், பலமான அடித்தளம் அமைத்து, சாலை போட வேண்டும். மற்ற இடங்களில் உள்ள 'ஜிக் ஜாக்' பள்ளங்களையும் சரிசெய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.