திருப்போரூர் : ஆலத்துாரில் நீர்பாசன கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 'பொக்லைன்' இயந்திரத்தை, சமூக விரோத கும்பல் தீ வைத்து எரித்தது.திருப்போரூர் அடுத்த ஆலத்துார் கிராமத்தில், 200 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது.
500 ஏக்கர் பாசன பரப்பிற்கு உதவுகிறது. மூன்று மதகு வழியாக, கால்வாயில் தண்ணீர் செல்கிறது.கடந்த 25 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் புதர்மண்டிக் கிடந்த பாசன கால்வாய்களை துார்வார வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 12ல் கால்வாய் துார்வரும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துார்வார கூலி ஆட்கள் கிடைக்காததால், பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து, பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக, 3 கி.மீ., உள்ள வெட்டியான் மதகு கால்வாய் துார்வாரும் பணி, 13ல் துவக்கப்பட்டது. இதில், 1 கி.மீ., வரை கால்வாய் துார்வாரப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மாலை ஓட்டுனர், பணி நடக்கும் கால்வாயிலேயே இயந்திரத்தை நிறுத்தி சென்றார்.இரவில் மர்ம நபர்கள், ஜே.சி.பி., இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்தியும், அதில் உள்ள டீசலை எடுத்து இயந்திரத்தின் மீது தெளித்தும் தீவைத்தனர்.
இன்ஜின் உட்பட 50 சதவீதம் சேதமடைந்தது.ஊராட்சி நிர்வாகத்தினர், திருப்போரூர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.