தாம்பரம் : மாட்டுப் பொங்கலான நேற்று, வண்டலுார் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, காணும் பொங்கலான இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாட்டு பொங்கலான நேற்று சுற்றுலா தளம் மற்றும் பூங்காக்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து, தேவையான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், எதிர்பார்த்ததை விட கூட்டம் குறைவாகவே இருந்தது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றியே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேற்று முழுதும், குறைவான எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் பூங்காவை சுற்றிப் பார்த்தனர்.31ம் தேதி வரை மூடல்வண்டலுார் பூங்காவில், சில நாட்களுக்கு முன் 352 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 72 ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, தொற்று உறுதியானவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி, சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வண்டலுார் உயிரியல் பூங்கா, நாளை முதல் 31ம் தேதி வரை மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜன., 31ம் தேதி, நிலைமையை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப முடிவு எடுத்து, பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு காரணமாக இன்றும் பூங்கா மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.