படப்பை : அம்மணம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பாளர்களிடம், ஊராட்சி நிர்வாகம் வீட்டு வரி வசூல் செய்வது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், படப்பை அருகே ஒரத்துார் ஊராட்சியில், அம்மணம்பாக்கம் ஏரி உள்ளது.
குன்றத்துார் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் நீரை பயன்படுத்தி, ஒரத்துாரில் 40 ஏக்கரில் விவசாயம் நடந்தது.தற்போது அப்பகுதியில் விவசாயம் கைவிடப்பட்டதால், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவிட்டன. இதனால், ஏழு ஆண்டுகளில் அம்மணம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து, 240 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு குடிநீர், மின் விளக்கு, சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.ஒரத்துார் நீர்த்தேக்கத்தில் இருந்து அம்மணம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்ல, இணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பருவமழையின் போது இந்த ஏரி விரைவாக நிரம்பிவிடும். கடந்த 2019ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது, அம்மணம்பாக்கம் ஏரி கரையை, மர்ம நபர்கள் உடைத்து, தண்ணீரை வெளியேற்றினர். அதன் பின் தற்போது வரை உடைப்பு சரி செய்யப்படாமல் உள்ளது.இந்நிலையில், அம்மணம்பாக்கம் ஏரியின் உள்ளே ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்களுக்கு, ஒரத்துார் ஊராட்சி நிர்வாகம் 5,000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து, வீட்டு வரி ரசீது தருவதாக புகார் எழுந்துள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி ஹிந்து கோவில்களை தமிழக அரசு இடித்து வரும் நிலையில், அம்மணம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பாளர்களிடம், ஊராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.