காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் 1 டன் கரும்புகளால் காளை மாடுகள் செய்து, பொங்கல் விழாவை கொண்டாடி, விவசாயி ஒருவர் அசத்தி உள்ளார்.காஞ்சிபுரம் அடுத்த, குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45;
விவசாயி. நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று முன்தினம், அவரது விவசாய நிலத்தில், 1 டன் கரும்புகளில் இரு காளை மாடுகள் செய்து, குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். கிராமத்தினர் பலரும் இதை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.செந்தில்குமார் கூறியதாவது:நாங்கள் விவசாய குடும்பம். ஆண்டுதோறும், பொங்கல் வைத்து கொண்டாடுவோம்.
விவசாயத்திற்கு உழுவது முதல் அறுவடை வரை, அனைத்து பணிகளுக்கும் இயந்திரம் வந்துவிட்டதால், மாடுகளின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் 1 டன் கரும்பு வாங்கி, சினிமாவில் கலை இயக்குனராக பணிபுரிபவரை அழைத்து வந்து, காங்கேயம் காளை மாதிரி, இரு மாடுகளை வடிவமைக்க ஒரு வாரம் ஆனது.இதை செய்ய போக்குவரத்து செலவு உட்பட 2.5 லட்சம் ரூபாய் ஆனது.
ஒரு வாரத்திற்கு, இந்த கரும்பு மாடுகளை, பொதுமக்கள் பார்வையிடலாம்.கடந்த ஆண்டு கரும்புகளால் பானை செய்து, பொங்கல் விழா கொண்டாடினோம். நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வாறு பொங்கல் விழா கொண்டினோம்.இவ்வாறு அவர் கூறினார்.