உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த பழைய களியாம்பூண்டி கிராமத்தில், உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அங்குள்ள ஒரு அரச மரத்தடியில், 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டா தேவி சிலையும், விஜயநகர மன்னர்கள் காலத்தில் பெருமாள் கோயில்களுக்கு நிலத்தை தானமாக வழங்கியதன் எல்லையை குறிக்கும் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலதான எல்லைக்கல்லையும் கண்டறிந்தனர்.
உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையானது ஒன்றரை அடி உயரம், ஒரு அடி அகலத்தில் அமர்ந்த நிலையில், அடிப்பாகம் மண்ணில் புதைந்து காணப்படுகிறது. இவரின் வலப்பக்கம், அவரது மகள் மாந்தி, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த உடையுடன் நின்ற நிலையிலும், இடப்பக்கம் அவரது மகன் மாந்தன் மாட்டுத் தலையுடன் வீற்றிருக்கிறார்.மூத்த தேவியின் தலையில், கரண்ட மகுடம் காணப்படுகிறது. கைகள் உடைந்தும், முகம் மார்பு சிதைந்த நிலையிலும் எஞ்சிய பகுதி மண்ணில் புதைந்துள்ளது. இது ஒன்பதாம் நுாற்றாண்டை சார்ந்தது. மூத்த தேவிக்கு தவ்வை ஜேஷ்டாதேவி போன்ற பெயர்களுமுண்டு. இவர், திருமாலின் மனைவியான லட்சுமி தேவியின் மூத்த சகோதரி ஆவார். இவர் குறித்த தகவல்களை, சங்க இலக்கியங்கள் மற்றும் திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.பல்லவர் காலத்தில் வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய்தெய்வம், நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக விளங்கியுள்ளது. சில கோயில்களில் இவருக்கென்று தனி சன்னிதியும் இருந்துள்ளது.பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த இந்த தெய்வம் வளமையின் அடையாளமாக, குழந்தைப்பேறு தருபவளாக, செல்வவளம் பெருக்குபவளாக போற்றப்பட்டாள். நாளடைவில், மூத்ததேவி என்பது மருவி மூதேவியாக வழக்கில் வந்து, ஒரு கட்டத்தில் வழிபாடு இல்லாமல் போய் உள்ளது.இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலை அருகில், 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட ஒரு கல் உள்ளது. இதில், மரம் போன்ற ஓர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில் 12 பூவிதழ்களை கொண்டு சக்கரம் இடம்பெற்றுள்ளது. அதன் உச்சியில் திருவாச்சி போன்று அழகிய வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிற்பத்தின் நடுப்பகுதியின் வலப்பக்கத்தில் சூரியனும், இடப்பக்கத்தில் சந்திரனும் காட்டப்பட்டுள்ளது.இதற்கு திருஆழிக்கல் என்று பெயர். ஆழி என்றால் சக்கரம் என்று பொருள். மன்னர் காலங்களில் பெருமாள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக வழங்குவர். அந்நிலத்தில் வரும் வருவாயைக் கொண்டு கோவிலின் அன்றாட பூஜைகளுக்கும், பராமரிப்பு மற்றும் திருவிழா நடத்தவும் பயன்படுத்தப்பட்டது.அவ்வாறு தானமாக அளிக்கப்படும் நிலத்தின் எல்லையை குறிப்பதற்காக திருமாலின் கையிலிருக்கும் சக்கரத்தை அடையாளமாக அந்தக் கல்லில் சிற்பமாக செதுக்கி நட்டு வைப்பர். இது 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னர்கள் காலத்தை சார்ந்தது.மூத்த தேவி சிலையும், இந்த நிலதான எல்லைக்கல்லும், வெவ்வேறு இடங்களில் இருந்து காலப்போக்கில் அரசமரத்தடியில் மக்கள் இரண்டையும் ஒன்றாக வைத்து இருக்கலாம். கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு அடையாளமாக கொண்டிருக்கும் இந்த வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பது நம் கடமை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.