அன்னுார்:கனமழையால் சுக்ரமணிகவுண்டன்புதுாரில் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணிக்கு அன்னுார் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் கனமழை பெய்தது. ஒன்றரை மணி நேரம் பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொகலுார் ஊராட்சியில் இரண்டு குளங்கள் நிரம்பின. கரியாம்பாளையம் ஊராட்சி, சுக்ரமணிகவுண்டன்புதுாரில் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'புதிதாக அருகில் அமைக்கப்பட்ட 'லே-அவுட்'டில் மழைநீர் செல்வதற்கான பாதையை தடுத்து விட்டனர். இதனால், வழக்கமாக செல்லும் பள்ளத்தில் மழைநீர் செல்லாமல், குடியிருப்புக்குள் புகுந்து விட்டது. ஏற்கெனவே இரு முறை இதுபோல் மழை நீர் புகுந்துள்ளது' என, புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து கரியாம்பாளையம் ஊராட்சி தலைவர் செல்வி கூறுகையில், "லே-அவுட் உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரை அகற்றும் பணி நடக்கிறது. மீண்டும் மழைநீர் குடியிருப்புக்குள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.