பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதி, அதிகாரிகள் வரும் போது மட்டும் சுத்தம் செய்வதும், மற்ற நாட்களில் புதர் மண்டி காணப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அதன் யார்டு பகுதி, பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் நிர்வாகத்தில் உள்ளது.
பொள்ளாச்சி பகுதியை பராமரிப்பதில், கோட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்துவதில்லை, என, பல ஆண்டுகளாக புகார் நிலவுகிறது.அதை நிரூபிக்கும் வகையில், ஸ்டேஷனில் ரயில்கள் வந்து, நின்று செல்லும் யார்டு தண்டவாளப் பகுதி, ஆண்டின் பெரும்பாலான நாட்களில், உரிய பராமரிப்பின்றி, புதர் செடிகள் மண்டி காணப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் இருந்து, அதிகாரிகள் யாராவது ஆய்வுக்கு வரும் தகவல் வந்தால் மட்டுமே, ஸ்டேஷன் மற்றும் யார்டு பகுதி தண்டவாளங்கள் சுத்தம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. ஸ்டேஷன் நிர்வாகமும், இது குறித்து சிறிதும் கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டுகிறது.
ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள், பயணியருக்கு உரிய கழிப்பறை வசதி இல்லை. ரயில் இயக்கத்தில் பாரபட்சம், பயணியர் ஓய்வறையை பூட்டி வைத்திருப்பது, முன்பதிவு கவுன்டர் ஒரு 'ஷிப்ட்' மட்டுமே இயங்குவது என பல பிரச்னைகள் நிலவுகிறது.இந்நிலையில், ரயில்கள் பாதுகாப்பாக இயங்க அடிப்படையான யார்டு தண்டவாளங்கள் பராமரிப்பில் கூட அலட்சியம் காட்டுவது, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் நிர்வாகம் மற்றும் பாலக்காடு கோட்ட நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளது.