ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததால் நெல் விவசாயம் செழிப்படைந்துள்ளது. தற்போது 35 ஆயிரம் எக்டேரில் அறுவடைக்கு தயாராகவும், அறுவடைநடந்தும் வருகிறது. பிப்., முதல் வாரத்தில் முழுமையாக அறுவடை பணி நிறைவடையும்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டில் அதிகமாக ஒரு லட்சத்து 36 ஆயிரம் எக்டேரில் நேரடி நெல்விதைப்பு நடந்தது. இதில் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, நயினார்கோவில் ஒன்றியங்களில் முன்கூட்டியே விதைப்பு செய்யப்பட்டது.குறுகிய கால பயிர்களான ஆர்.என்.ஆர், ஏ.டி.டி -1845, கோ-51 ஆகிய ரகங்கள் 100 முதல் 105 நாளில் அறுவடையாகும். இந்த நெல் ரகங்கள் பயிரிட்டவர்கள் இப்போது அறுவடை செய்கின்றனர். பல இடங்களில் தயாராக உள்ளது.
இது தவிர, பி.பி.டி, என்.எல்.ஆர்., ரகங்கள் 120 நாட்களில் அறுவடையாகும். இவை இன்னும் பத்து நாட்களில் அறுவடை துவங்கும். பிப்., முதல் வாரத்தில் அறுவடை முழுமையாக நிறைவடையும்.விவசாயத்துறை சார்பில் பல இடங்களில் அறுவடை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நல்ல மகசூல் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த இரு மாதத்திற்குமுன் பெய்த பலத்த மழையால் நெற்பயிர் நாற்று அழுகியது. மாவட்டத்தில் 680 எக்டேரில் பாதிப்பு ஏற்பட்டது. இழப்பீடாக எக்டேருக்கு ரூ.6038 வழங்கப்படும், என வேளாண் இணை இயக்குனர் டாம்.பி.சைலஸ் தெரிவித்தார்.