ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துவரும் நிலையில், முழு ஊரடங்கான நேற்றும் மக்கள் பலர் வெளியே சுற்றினர். அவர்களை போலீசார் எச்சரித்து விரட்டினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல்அதிகரித்துள்ளது. கடந்தவாரம் தினமும் 30 முதல் 50 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது தினமும் 100க்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தடுப்பு அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஊரடங்கு தடையை மீறி தேவையின்றி சுற்றிதிரிந்த நபர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.
கடைகள் அடைக்கப்பட்டதால் நகரின் முக்கியவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. உத்தரகோசமங்கை, வழிவிடுமுருகன்கோயில் உள்ளிட்ட கோயில்கள் பக்தர்கள் வருகையின்றி காணப்பட்டது.இருப்பினும் ராமநாதபுரம் சந்தைத்திடல், அரண்மனைபகுதி, ராமநாதபுரம் பை-பாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் போதிய கண்காணிப்பு இல்லாததால் முகக்கவசம் அணியாமல்இரு சக்கர வாகனங்களிலும் சில ஆட்டோக்கள்சமூக இடைவெளியின்றி பயணிகளை ஏற்றிச்சென்றனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் பரவவாய்ப்புள்ளது. ஆகையால் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதநபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா ஊரடங்கால் பரமக்குடி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 வரை அபராதம் விதித்தனர்.
மேலும் பஸ் ஸ்டாண்ட் தொடங்கி, பஜார் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் சென்று வரும் சூழல் இருந்தது. அம்மா உணவகத்தில் பலரும் சாப்பிட்டு சென்றனர். ஆங்காங்கே சில இறைச்சிக் கடைகளில் மறைமுகமாக கறி விற்பனை செய்யப்பட்டது.