திருவாடானை : நெல் அறுவடை இயந்திர வாடகை நிர்ணயம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடை நடக்கிறது. சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களிலிருந்து வந்துள்ள நுாற்றுக்கணக்கான நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம் இப் பணிகள் நடைபெறும் நிலையில் இயந்திரங்களின் வாடகை உயர்வால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து ஆதியூர் ஜெயராமன் கூறியதாவது:ஒரு மணி நேரத்திற்கு 3200 வரை வாடகை வசூல் செய்யப்படுகிறது. பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் இதைவிட குறைவான தொகை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இத் தாலுகாவில் உரிமையாளர்கள் அவர்களின் இஷ்டம் போல் வாடகை வசூல் செய்கின்றனர்.அரைமணி நேரத்தில்அறுவடை செய்ய வேண்டிய நிலத்தை ஒன்றரை மணி நேரத்திற்கு அறுவடை செய்து அதிக வாடகை வசூல் செய்கின்றனர்.இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட அதிகாரிகள் உடனடியாக குறைந்த வாடகையை நிர்ணயம் செய்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.