கன்னிவாடி : கு.ஆவரம்பட்டியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்குவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ஆவரம்பட்டி, மைலாப்பூர், அனுப்பபட்டி உள்பட பல கிராமங்கள் உள்ளன. வணிக நிறுவனங்கள், அதிக வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் உள்ள மெயின்ரோட்டில் பல தெருக்குழாய்கள் உள்ளன.ஆவரம்பட்டி, மைலாப்பூர், அனுப்பபட்டியில் தெருக்குழாயடியில் வீணாகும் நீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. சில தெருக்களில் கால்வாய் இருந்தும் பராமரிப்பின்றி கழிவுகளால் தண்ணீர் வடிய தடை ஏற்படுகிறது. தெருக்குழாய் அருகே கழிவுநீராக தேங்கி, சுகாதாரக்கேடை ஏற்படுத்துகிறது.
இப்பகுதியினர் கூறுகையில், ''அருகிலுள்ள ஊராட்சிகளில் வீடுகளுக்கே குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் குட்டத்துப்பட்டியில் குடிநீருக்காக குடங்களுடன் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தெருக்குழாயை சுற்றி தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய், துர்நாற்றம் என, சுகாதாரக் கேடான சூழல் நீடிக்கிறது'' என்றனர்.