சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். இதில் பங்கேற்க வெளிமாநிலம், வெளிநாட்டவர் என லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர்.
தோட்டக்கலைத் துறை பூங்காக்களான பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் மலர்ப் படுகைகள் தயார் செய்து லட்சக்கணக்கான மலர்கள் பூக்கும் அளவிற்கு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.கடந்த 2019 -- 20 காலகட்டத்தில் 28 லட்சம் பேர் வருகை இருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக சீசன் ரத்து செய்யப்பட்டதால் 3 மடங்கு பயணிகள் வருகை குறைந்தது.
தற்போது எதிர்வரும் மலர் கண்காட்சிக்காக இப்போதே பூங்காக்கள் தயாராகி வருகின்றன.கோடை விழா ஆர்வம் அதேசமயம் கொரோனா மூன்றாம் அலையை கட்டுபடுத்த அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் சீசன் தருணங்களில் பெரும் தொற்று பரவியதால் நடக்காத கோடைவிழா, நடப்பாண்டிலாவது நடக்குமா என சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
மூன்றாம் அலை கட்டுக்குள் வரும் பட்சத்தில் மலர் கண்காட்சி நடக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு மலர் கண்காட்சியை பயணிகள் கண்டு ரசிக்க தோட்டக்கலை துறை இணைய வழியில் ஏற்பாடு செய்தது. இருந்தாலும் நேரடியாக கண்டு ரசிக்கவே பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கடந்த 2019- - 20 ல் இரண்டரை லட்சம் பேர் மலர்க்கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் தோட்டக்கலைத்துறைக்கு அதிக வருவாய் கிடைத்தது. இரு ஆண்டுகளாக வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. நடப்பாண்டில் கொரோனா துயரம் நீங்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.