உடுமலை:உடுமலை அரசு அலுவலர் குடியிருப்பு வளாகத்தில், கழிவுநீர் வெளியேற கால்வாய் அமைக்கப்படாததால், சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.உடுமலை, பழநிரோட்டில், அரசு அலுவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, 70 வீடுகள் உள்ள நிலையில், அதிக வாடகை காரணமாக, பல வீடுகள் காலியாக உள்ளன.குடியிருப்பு வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் பல ஆண்டுகளாக இடிந்து சேதமடையும் நிலையில் உள்ளது. சில குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை காலி செய்து, வேறு இடங்களில் குடியேறியும் வருகின்றனர்.அதேபோல், வளாகத்தில் சுத்தப்படுத்தும் பணி, சரிவர மேற்கொள்ளப்படாமல் இருப்பதால், சமீபத்தில் பெய்த மழையினால் இப்பகுதியில் அதிகளவு, செடிகள், முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது.குடியிருப்பு மக்கள் கூறியதாவது:போதிய பராமரிப்பு இன்றி, சிதிலமடைந்து வரும் கட்டடம் காரணமாக, காலியாகவுள்ள வீடுகளில் வாடகைக்கு வர ஊழியர்கள் தயங்குகின்றனர். கழிவுநீர் வெளியேறுவதற்கு ஏற்றாற்போல், கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது.தவிர, மழைநீர் வெளியேறுவதற்கும் வடிகால் கிடையாது.ஆங்காங்கே கழிவுநீர் தேக்கமடைவதால், வீடுகளைச்சுற்றி சேறும், சகதியுமாக மாறி வருகிறது. துறை ரீதியான அதிகாரிகளின் ஆய்வு அவசியம்.அதன் அடிப்படையில், வீடுகள் மராமத்துப்பணி மேற்கொள்ள வேண்டும். வளாகத்திற்குள் சுத்தப்படுத்தும் பணியை தீவிரமாக செய்ய வேண்டும். கழிவுநீர் தேக்கத்தால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.