கத்திப்பாரா மேம்பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் அரங்கேறி, உயிர்பலிகளும் நிகழ்ந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.கத்திபாரா மேம்பாலம் என்று அழைக்கப்படும் கிண்டி மேம்பாலம்,
ஜி.எஸ்.டி., சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி மற்றும் உள்வளைவு சாலை ஆகிய முக்கிய சாலைகளின் சந்திப்பு.கிண்டியில் உள்ள நான்கு முக்கிய சாலையின் சந்திப்பில் இருந்த ரவுண்டானாவில் ஏற்பட்ட வாகன நெரிசலை சமாளிக்க, மேம்பாலம் கட்டும் திட்டம் 2005ல் துவக்கப்பட்டது.
எவ்வித காத்திருப்பும் இன்றி வாகனங்கள் வெவ்வேறு திசைகளில் நான்கு முக்கிய சாலைகளுக்கும் செல்லும் விதமாக, இரண்டு அடுக்கு மேம்பாலமாக, 'கிளாவர்' வடிவத்தில் அமைந்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டு முதல் கத்திப்பாரா மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. ஆனால், இந்த மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி, பல உயிர்கள் பலியாகி வருகின்றன.ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்லும் வழியில், நந்தம்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்வதற்கும், ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து நந்தம்பாக்கம் செல்வதற்கும் வழித்தடம் உள்ளது.
அதேபோல், ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கிண்டி செல்வதற்கும், கிண்டியில் இருந்து ஈக்காட்டுதாங்கல் செல்வதற்கும் கத்திப்பாரா மேம்பாலத்தில் வழித்தடங்கள் உள்ளன.இந்த நான்கு சந்திப்புகளும் இணையும் இடங்களில், வாகனங்கள் வேகம் குறையாமலும், தங்கள் வழித்தடங்களை தவறி வருவதாலும் விபத்துகள் அதிகம் அரங்கேறுகின்றன. விபத்து பலிகள்கடந்த 2018ம் ஆண்டு மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக கீழே இறங்கிய தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில், அதிர்ஷ்டவசமாக, 10 பேர் உயிர் தப்பினர்.அதே ஆண்டு, மேம்பாலத்தில் லாரி மோதி மயிலாடுதுறையைச் சேர்ந்த சுதாகர், 28, பலியானார். கடந்த 2019ம் ஆண்டு, கட்டுப்பாட்டை இழந்து, 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த கல்லுாரி மாணவர் ரோகன் அந்தோணி சாமுவேல் பரிதாபமாக இறந்தார்.
அதே ஆண்டு, பணி முடித்து வீடு திரும்பிய போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நடராஜ், 56, தலைநசுங்கி இறந்தார்.கடந்த, மார்ச் மாதம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த சத்தியசீலன், 23, ஊரப்பாக்கத்தை சேர்ந்த லுார்துவின்சென்ட், 31, சமீபத்தில் கோவிந்தம்மாள், 45, என்ற பெண் விபத்தில் பலியானார்.குறிப்பாக நள்ளிரவில் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, மேலிருந்து கீழே கவிழ்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன.தீர்வு என்ன?ஒவ்வொரு முறை விபத்து நடக்கும்போதும், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விபத்துக்கான காரணம் குறித்த தகவலை போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி வைக்கின்றனர். இன்றளவில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வாக நான்கு சந்திப்புக்களில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு, வேகக் கட்டுப்பாடு செய்வது அவசியம்.
ஜி.எஸ்.டி., சாலை- - ஈக்காட்டுத்தாங்கல், ஈக்காட்டுத்தாங்கல்- - ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்லும் வாகனங்கள், குறிப்பிட்ட வழித்தடங்களை மட்டும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.அதேபோல, நந்தம்பாக்கம், கிண்டியில் இருந்து மேம்பாலம் ஏறும் வாகனங்கள்; ஜி.எஸ்.டி., சாலை- கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் - -நந்தம்பாக்கத்திற்கு மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்களுக்கு வழித்தட அடையாளம் அமைக்க வேண்டும்.எனவே, சம்பந்தப்பட்ட காவல், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், நேரில் ஆய்வு செய்து விபத்துக்களை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -நமது நிருபர்- -