திருப்பூர்:சொந்த ஊர் சென்றவர் திருப்பூர் திரும்ப இன்று முதல் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, கடந்த 11ம் தேதி இரவு முதல் மூன்று நாட்களுக்கு, திருப்பூர் மண்டலத்தில் இருந்து, 275 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடைசி நாளில் பயணித்த, 65 ஆயிரம் பேருடன் சேர்த்து, மூன்று நாளில், 1.30 லட்சம் பேர் அரசு பஸ்கள் மூலம் திருப்பூரில் இருந்து வெளியூர் பயணித்தனர். கடந்த 14, 15, 16 ம் தேதி சிறப்பு பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர் மீண்டும் திருப்பூர் திரும்ப வசதியாக, 165 பஸ்கள் இன்று முதல் வரும், 19ம் தேதிவரை இயக்கப்படுகிறது. மதுரை, தேனி, திருச்சி, நாகர்கோவில், கும்பகோணம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதியில் இருந்து, திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப்படும். இது தவிர, பிற கோட்டங்களில் இருந்து திருப்பூருக்கு பஸ் இயக்கப்படுகிறது.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பயணிகள் ஒரே நேரத்தில் திரும்ப வாய்ப்பு குறைவு என்பதால், கூட்டத்துக்கு ஏற்ப பஸ் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நெரிசலை பொறுத்து பஸ்கள் இயக்கம் இருக்கும். இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும், இரவு, 10:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை தொலைதுார பஸ்கள் இயக்கப்படும்,' என்றனர்.திருப்பூரில் இன்றும், நாளையும் (17, 18ம் தேதிகள்), பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால், நாளையில் இருந்துதான் வெளி மாவட்டத்தினர், திருப்பூர் திரும்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.