பல்லடம்:கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று இரண்டாவது வாரமாக திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காணும் பொங்கல் நகரங்களில் களையிழந்தாலும், கிராமங்களில் ஓரளவு கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டன.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இடம் விட்டு இடம் செல்வோரை தடுக்க, இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க கடந்த 9ம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.முதல் வாரம் என்பதாலும், ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில் முழு ஊரடங்கை கடந்து விட்டதாலும், மக்கள் அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டனர் இரண்டாவது வாரமாக தொடர்ந்து நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொழுது விடிந்த பின்பே, பொங்கல் சிறப்பு பஸ்கள் பணிமனைக்கு திரும்பின.வழக்கமாக பொங்கல் தினத்தன்று வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் மக்கள், மாட்டுப்பொங்கல் தினங்களில் சொந்த ஊர், உறவினர் வீடு, தோட்டங்களுக்கு சென்று கால்நடைகளுடன் இணைந்து மாட்டுப்பொங்கலை கொண்டாடுவர்.மூன்றாம் நாளான காணும் பொங்கல் நாளில் வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலா தலங்களுக்கு வரிந்து காட்டி பயணிப்பர். டூவீலர், கார்களில் குடும்பத்தோடு காலையில் புறப்படுபவர்கள்; இரவு வீடு திரும்புவர். இதுவரை பொங்கல் சுற்றுலா போலவே காணும் பொங்கல் தினம் அமைந்து வந்தது.நடப்பாண்டு ஞாயிற்றுக்கிழமை என்பதால், கொண்டாட்டங்கள் களைகட்டும் என ஒரு மாதம் முன்பே பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரண்டாவது வாரமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. பல இடங்களுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தவர்கள் நேற்று வீடுகளில் முடங்கினர். நகரில் காணும் பொங்கல் விழா களையிழந்தது.பூங்கா 'வெறிச்'திருப்பூரில் செயல்பாட்டில் இருக்கும் ஒரே ஒரு பூங்கா; பார்க் ரோட்டில் இருக்கும் வெள்ளி விழா பூங்கா. கடந்தாண்டு காணும் பொங்கல் நாளில், 4,000 பேர் ஒரே நாளில் பூங்காவுக்கு வந்து சென்றனர்.நடப்பாண்டு முழு ஊரடங்கு காரணமாக பூங்கா மூடப்பட்டது. துாரி, ராட்டினங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு ஊஞ்சல், உபகரணங்கள் அசைவின்றி அப்படியே நின்றிருந்தது.கிராமங்களில்கொண்டாட்டம்திருப்பூர் நகரம் இவ்வாறு இருந்தாலும், மாவட்டத்தின் புறநகர பகுதிகளில், கிராமப்புறங்களில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டியது. பூ பறிக்கும் நோன்பு என அழைக்கப்படும் காணும் பொங்கல் பல்லடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம், பொங்கலுார், வெள்ளகோவில் சுற்றுவட்டாரங்களில் களைகட்டியது.