வரலாறு காணாத நுால் விலை உயர்வால், திருப்பூர் பின்னலாடைத் துறை ஸ்தம்பித்து நிற்கிறது. நுால் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, இன்றும், நாளையும் உற்பத்தி நிறுத்தத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இதே கோரிக்கைகளுக்காக, நாளை (ஜன.18) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் 'நிட்மா' அமைப்பு அறிவித்துள்ளது.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, நுால் விலை உயர்ந்திருப்பதற்கு, பருத்தி மீதான இறக்குமதி வரி விதிப்பும், யூக பேரமுமே காரணம் என்பது குறித்து, நமது நாளிதழில், கடந்த 11ம் தேதி, முழுப்பக்கக் கட்டுரை வெளியானது. அதற்கு ஜவுளித்துறையினரிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதற்கேற்ப, பஞ்சு விலை இறங்கினால், நுால் விலையும் குறையும் என்பதை நுாற்பாலை உரிமையாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.பஞ்சு விலையின் அடிப்படையில் தான் நுால் விலை காலம் காலமாக நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2011--12ம் ஆண்டில், பஞ்சு விலை கேண்டிக்கு 65 ஆயிரம் வரை சென்று, ஒரே நாளில் பாதியாகக் குறைந்தது. அதனால், நுாற்பாலைகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. அந்த நெருக்கடியிலிருந்து, நுாற்பாலைகள் மீண்டெழுந்து வருவதற்கே பல ஆண்டுகளானது.அதனால், நுால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும், பஞ்சு பதுக்கலையும், யூக பேரத்தையும், பருத்தி மீதான இறக்குமதி வரி விதிப்பையும் எதிர்த்தும் போராட வேண்டுமென்ற வாதமும் வலுத்துள்ளது. நுால் ஏற்றுமதியை தற்காலிகமாக நெறிமுறைப்படுத்தவும் இவர்கள் வலியுறுத்த வேண்டியதும் அவசியமாகவுள்ளது.இத்தகைய கோரிக்கைகளை, ஆயத்த ஆடைத்துறையில் பங்கேற்கும் அனைத்துத் தொழில் அமைப்புகளும் இணைந்து ஒரே குரலாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் தற்போது நுாற்பாலைகளை மட்டும் குறி வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவது, இத்தொழிலில் எதிர்காலத்தில் பல சிக்கல்களை உருவாக்குமென்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.இந்தப் பிரச்னை பெரிதாகாத வகையில், அனைத்து அமைப்புகளையும் ஓரணியில் திரட்டி, மத்திய, மாநில அரசுகளிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சென்று தீர்வு காணும் பொறுப்பு, அனைத்துக் கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளது. ஆனால் அவர்களும் தங்களுடைய கட்சிகளின் நிலைப்பாட்டிற்கேற்ப, இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவும், எதிர்ப்புமாக கருத்துத் தெரிவிப்பது பிரச்னைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக, மேலும் பெரிதாக்கவே வாய்ப்பு அதிகம்.ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு தேவைஇந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கூறுகையில், ''ஒரே ஆண்டில், 70 முதல் 80 சதவீதம் நுால்விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வை சமாளிக்க முடியாத காரணத்தால் தான், தொழில் அமைப்புகள், ரயில் மறியல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளன. நுால் ஏற்றுமதியில் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். பருத்தி விலை உயர்வுக்கு ஏற்ப நுால் விலை உயர்த்தப்படுவதை கண்காணிக்க வேண்டும். நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும், என்.டி.சி., நுாற்பாலைகளை, அந்தந்த மாநில அரசுகளே இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம்'' என்றார்.யூக பேரத்துக்கு தடை தேவைமா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த கோவை எம்.பி., நடராஜன் கூறுகையில், ''பருத்தி மற்றும் நுால் விலை ஏற்றத்துக்கு யூக பேர வர்த்தகம் முக்கிய காரணம். அதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் தொழில் வளர்ச்சிக்கான அடிப்படை மூலப்பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். பருத்தி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உடனே ரத்து செய்து, ஜவுளித்தொழிலைக் காக்க வேண்டும்,'' என்றார்.தொழில்துறையை காப்பாற்றணும்!பா.ஜ, தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதிஎம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன் கூறுகையில், ''இந்திய பருத்திக்கழகம், தேவைக்கேற்பவும், விளைச்சலுக்கு ஏற்பவும் 'கோட்டா' முறையில் பருத்தியை வர்த்தகர்களுக்கும், சிறு குறு பஞ்சாலைகளுக்கும் வழங்கி வருகிறது.உலகம் முழுக்க மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நம்நாட்டிலும் அதன் தாக்கம் உள்ளது. விவசாயிகளையும் தொழில்துறையையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்.'' என்றார்.இறக்குமதிக்கு வரிவிலக்கு தேவைஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் கூறுகையில், ''திருப்பூர் ஜவுளித்துறையின் வாழ்வதாரத்தைக் காக்க, நுால்விலையை குறைக்க வேண்டும். பஞ்சு இறக்குமதிக்கு வரிவிலக்கு தர வேண்டும்,'' என்றார்.தி.மு.க.,வைச் சேர்ந்த தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் கூறுகையில், ''பஞ்சு, நுால் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும். இன்றும், நாளையும் பின்னலாடைத் துறையினர் நடத்தும் போராட்டத்துக்குமுழு ஆதரவுதெரிவித்துள்ளேன்,'' என்றார்.இந்தப் போராட்டங்களுக்கு, தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால், நுால்விலை குறையாதபட்சத்தில், போராட்டம் மேலும் வலுக்கும் வாய்ப்புள்ளது. அது தொழிலை மேலும் பாதிக்கும். எனவே, பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு உடனே எடுப்பது அவசியம்.தொழில் அமைப்புகள் ஓரணியில் திரண்டு இதை அரசிடம் வலியுறுத்துவது அதை விட முக்கியம்.தொழிலை பாதுகாப்பது முக்கியம்''தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த நவம்பரில், கிலோவுக்கு 50 ரூபாய் உயர்த்தியபோது, திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, டிசம்பரில், கிலோவுக்கு 10 ரூபாய் நுால் விலையை குறைத்தனர். இம்மாதம் மீண்டும், கிலோவுக்கு 30 ரூபாய் விலை உயர்த்திவிட்டனர். நுால்விலை உயர்வால், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஆர்டர்களை இழந்து தவிக்கின்றன. தொழிலாளரை பாதுகாக்க, முதலில் தொழிலை பாதுகாப்பது அவசியமாவதால், ரயில் மறியல் போராட்டத்தில், தொழிற்சங்கங்களும் பங்கேற்க உள்ளன.''-சேகர், ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொதுச்செயலாளர்.ஆடை ஏற்றுமதியே சிறந்தது''நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் தொழில் துறையினர் உற்பத்தி நிறுத்தம் மற்றும் ரயில் மறியலில் ஈடுபடுகின்றனர். இதற்கு, சி.ஐ.டி.யு., முழு ஆதரவு அளிக்கிறது. மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதைவிட, ஆடையாக ஏற்றுமதி செய்தால், வேலை வாய்ப்பு பெருகும்; நாட்டுக்கு அன்னிய செலாவணியும் அதிகம் கிடைக்கும். எனவே, மத்திய அரசு, பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும்; இறக்குமதி பஞ்சு மீதான வரியை நீக்க வேண்டும்.''-சம்பத், சி.ஐ.டி.யு., பனியன் சங்க பொதுச்செயலாளர்.-நமது நிருபர் குழு-