திருப்பூர்:காணும் பொங்கலை, பூப்பொங்கல், பூ நோம்பி, கன்னிப் பொங்கல் அல்லது கணுப்பண்டிகை என்றும் அழைப்பர்.உறவினர்களை, நண்பர்களைக் காணுதல், பெரியோர் ஆசி பெறுதலுடன், கோவில்கள், பொழுதுபோக்கு தலங்களுக்கு குடும்பத்தினருடன் சென்றுவருவர். கிராமங்களில் கால்நடைகளை தங்கள் குடும்ப உறுப்பினராக பாவிப்பதுண்டு. இவர்கள் கோவில்களுக்கு கால்நடைகளை அழைத்து சென்று, நேர்த்திக்கடன், வேண்டுதல் செலுத்தி வருவது வழக்கம்.ஆற்றங்கரை, மலைக்கோவில்களுக்கு சென்று பாட்டுப்பாடி, கும்மி அடித்து மகிழ்வாக பொழுது போக்கி விட்டு, அங்கிருந்து பூப்பறித்து வருவதும் நடைபெறும். இதை தான் 'பூப்பறிக்கும் நோன்பு' என்று கொங்கு மாவட்டங்களில் குறிப்பிடுகின்றனர்.மணம் முடித்துக் கொடுத்த பெண்களுக்கு, பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பூப்பொங்கல் சீர் கொண்டு போய் கொடுத்து வாழ்த்துவர். சீர் பெறும் பெண்கள், சகோதரர்கள் நலம் பெற்று வாழ வேண்டி, நோன்பு நோற்று, கணுப்பிடி வைப்பது வழக்கம். முந்தைய நாள் பொங்கிய சாதத்தை, உடன்பிறந்தவர்களின் நன்மைக்கு வேண்டி, காக்கை, குருவிகளுக்கு அன்னமிடுவதே இந்த நோன்பாகும்.ஆற்றங்கரை அல்லது வீட்டு மொட்டைமாடியில், மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து ஐந்து வகை சாதங்களை படைப்பர். முதல் நாள் வைத்த பொங்கலில் கொஞ்சம் மஞ்சள் பொடி, குங்குமம் துாவியும், பால் சேர்த்தும், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதமாகவும் காக்கை, குருவிகளுக்கு படையலிடுவர்.இந்த கணுப்பிடி வைக்கும் போது, 'காக்காப்பிடி வச்சேன்... கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதரர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்,' என்று சொல்லி படையலிட்டு, அண்ணன், தம்பி நலம் பெற்று வாழ பிரார்த்திப்பர். ஆனால், பலருக்கும் இந்த கணுப்பிடி வைக்கும் நோன்பு குறித்து அதிகம் தெரிவதில்லை. பொழுது போக்கு அம்சங்களுக்கு மட்டும் முக்கியத்தும் அளிப்பதாக, பெரியவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.இத்தினத்தன்று, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள்உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள், குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்படுவதுண்டு.கன்னிப்பொங்கல்... கன்று பொங்கல்'காணும் பொங்கல்' தினத்தை கன்னிப்பொங்கல், கன்றுப்பொங்கல் என்றும் அழைப்பதுண்டு. மணமாகாத இளம்பெண்கள், வெள்ளைத் துணியால் மூடப்பெற்ற தாம்பாளங்களை எடுத்துக் கொண்டு மாலை நேரத்தில் ஓரிடத்தில் கூடுவர்.ஒவ்வொருவர் தாம்பாளத்திலும் கரும்புத் துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் இருக்கும். கும்மியடித்துப் பாடல்களைப் பாடியபடியே ஊரில் உள்ள ஆற்றங்கரை, குளக்கரை நோக்கி செல்வர். மேளங்கள் முழங்கும்.கரையை அடைந்தவுடன் அங்கே ஒரு சிறிய மண்மேடை அமைக்கப்படும். அதற்கு பெயர், 'திட்டாணி'. கொண்டு வரப்பட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய தாம்பாளங்களை, அந்த மேடை மீது அடுக்குவர். மேடையைச் சுற்றி வட்டமாக நின்றபடி கும்மியடித்துப் பாட்டுப் பாடுவர்.பாடல்கள் பாடி முடிந்ததும், அவரவர் தாம்பாளங்களில் இருக்கும் பச்சரிசியில் சர்க்கரையைச் சேர்த்து, நீர் வார்த்துக் கலந்து வைப்பர். கற்பூரம் ஏற்றி, திருமணம் வேண்டி வழிபடுவர். இவ்வாறு வழிபடுவோருக்கு அந்தாண்டே திருமணம் நடைபெற்றுவிடும் என்பது ஐ தீகம்.சர்க்கரை கலந்த பச்சரிசி, அங்கு வேடிக்கை பார்க்க வந்திருக்கும் அனைவருக்கும் வினியோகிக்கப்படும். இதையே காளையருக்கு குறிக்கும் வகையில் 'கன்றுப்பொங்கல்' என்றும் அழைக்கின்றனர்.இந்தாண்டு, ஊரடங்கால், பல இடங்களில், காணும் பொங்கல், கொண்டாட வழியின்றி போனது.