திருப்பூர்:இந்தாண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் குறித்து, இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.ஆண்டுதோறும் ஜன., முதல் வாரம் அல்லது பொங்கல் விடுமுறையை ஒட்டிய நாட்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பாக, வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்துதல், விபத்தில் சிக்குவோருக்கு முதலுதவி அளித்தல், சாலை விதிமுறைகள் குறித்து தெரியப்படுத்துதல் என, போலீசார், போக்குவரத்து துறையினர், தன்னார்வலர்கள் மூலம் பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இந்தாண்டு பொங்கல் விடுமுறை முடியும் நிலையிலும், மாநில போக்குவரத்து துறை இயக்குனரகம் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழகத்தில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்தான், இதற்கு காரணம். திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., ஜெயதேவராஜிடம் கேட்ட போது, 'நடப்பாண்டுக்கான அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை' என்றார்.