அடையாறு, : அடையாறில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலை தடுப்பை அகற்றி, சாலை அகலப்படுத்தப்படுகிறது.அடையாறு சர்தார்படேல் சாலை, மத்திய கைலாஷ் சந்திப்பில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது.
சாலைக்கும், இதை ஒட்டிய பேருந்து நிறுத்தம் இடையே, 8 அடி அகலம், 20 அடி நீளம், ௧ அடி உயரத்தில் தடுப்பு இருந்தது.இருபது ஆண்டுக்குமுன், தடுப்பு இருந்த இடத்தில் மின்வாரிய அலுவலகம் இருந்தது. சாலை விரிவாக்கத்தின்போது, இந்த அலுவலகம் இடிக்கப்பட்டது.அப்போது, வாகனங்கள் பிரிந்து செல்ல வசதியாக, ௧ அடி உயரத்தில், சிமென்ட் கான்கிரீட் போட்டு சமப்படுத்தி தடுப்பாக அமைக்கப்பட்டது. தற்போது, நாளுக்குநாள் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு பின்னால் செல்லும் இலகுரக வாகனங்கள், தடுப்பு பகுதியில் முந்தி செல்ல முயலும்போது, தடுப்பு இருப்பது தெரியாமல், அதன் மீது ஏறி நிலைதடுமாறுகிறது.சில நேரம் விபத்தும் நடக்கிறது.
இதனால், தடுப்பை அகற்றி, சாலையாக மாற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. தடுப்பு அமைந்த பகுதியில், பள்ளம் எடுத்து, ஜல்லி போட்டு சமப்படுத்தி, அதன்பின், ஏற்கனவே உள்ள சாலை மட்டத்தில், தார்ச் சாலை போடப்படுகிறது.இதற்கான, பணி வேகமாக நடக்கிறது. இதன்வாயிலாக, சாலை அகலமாவதுடன் விபத்தும் தடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.