கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவுகிறது.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நேற்று மாலை 5:00 மணியளவில் ஒட்டேரி காலனி பகுதியைச் சேர்ந்த சிலர், நின்றிருந்தனர்.
அப்போது கண்டாச்சிபுரம், மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.பின், மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த சிலர் ஒட்டேரி பகுதிக்குச் சென்று, தகராறில் ஈடுபட்டனர்.இதனால் ஒட்டேரி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் திரண்டு, மடவிளாகம் பகுதிக்கு சென்று, கற்களை வீசி தகராறில் ஈடுபட்டனர்.விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் கண்டாச்சிபுரம் போலீசார் 30க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து தகராறில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.