திருப்பூர்:திருப்பூரில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட போதிலும், சாலைகளில், இருசக்கர வாகனங்கள் அதிகளவில் பயணித்ததை காண முடிந்தது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரண்டாவது வாரமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (16ம் தேதி) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொங்கலை முன்னிட்டு பலர் வெளியூர் சென்றதால், கடந்த இரு நாட்களாக சாலையில் கூட்டம் குறைந்திருந்தது; நேற்று, கனரக வாகனங்கள் இயக்கமில்லாமல், மேலும் குறைந்தது. பொங்கல் விடுமுறையின் தொடர்ச்சியாக, மூன்றாவது நாளான நேற்றும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.வணிக வளாகங்கள் ஆள் அரவமின்றி, இலை, தழையுடன் நிரம்பி வெறிச்சோடி காணப்பட்டது; காங்கயம் ரோடு, தாராபுரம் ரோட்டில் குறைந்தளவு டூவீலர் சென்று வந்தது. அதே நேரம், பல்லடம் ரோடு, பி.என்., ரோடு மற்றும் அவிநாசி ரோடுகளில், இருசக்கர வாகன எண்ணிக்கை கடந்த வாரத்தை விட அதிகமாக இருந்தது.அவிநாசி ரோடு, காந்தி நகர் சிக்னலில் தடுப்பு ஏற்படுத்தியிருந்த போலீசார், மருத்துவ, அவசர தேவைக்கு செல்வோர் ஆவணங்களை காண்பித்து பின் பயணிக்க அனுமதித்தனர்.காலை, 10:00 மணி வரை, இங்கு மட்டுமே, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் நகர எல்லையான அம்மாபாளையம், கணக்கம்பாளையம் பிரிவு, காலேஜ் ரோடு அணைப்பாளையம் பிரிவு வழியாக பலர் நகருக்குள் வந்தனர்.நகரின் முக்கிய இடங்களான எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, ரயில்வே ஸ்டேஷன் - நேரு வீதி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு இல்லை. பணியில் போலீசார் இருந்தாலும், இளைஞர்கள் பலர், வாகனங்களில் 'பறந்தனர்'.ஊத்துக்குளி ரோடு சபாபதிபுரம் முதல் மண்ணரை பத்து கி.மீ., துாரத்துக்கு ஒரு போலீசார் கூட இல்லை. சந்து, குறுக்கு வீதிகளில் புகுந்து பெண்கள், குழந்தைகளுடன் பலரும் குடும்பத்துடன் சாலைகளில் பயணித்தனர்.முழு ஊரடங்கின் போது கடைகளில் பார்சல் வழங்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் தொடர் விடுமுறை என்பதால், நேற்று செயல்பட்ட உணவகங்களில் பார்சல் வாங்க குறைந்தளவு வாடிக்கையாளர் மட்டுமே வந்திருந்தனர்; ஓட்டல் உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆங்காங்கே சைக்கிளில் வைத்து வடமாநிலத்தவர் 'டிரம் டீ' விற்பனை செய்தனர்.ரயில்வே ஸ்டேஷனில் ரயில் விட்டு இறங்குவோரை அழைத்து செல்ல ஆட்டோ, கால்டாக்சிகள் இயங்கின. ரயில் டிக்கெட்டை பயணிகள் காண்பித்த பின் அவர்களை அழைத்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.நகருக்குள் வந்த கனரக வாகனங்கள் ஏன் இயக்கப்படுகிறது என்ற காரணத்தை கேட்டு, விபரங்களை சேக ரித்துக் கொண்டனர்.