அவிநாசி:அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. நம்பியாம்பாளையம், கருவலுார், ராமநாதபுரம், சின்ன கானுார், தெக்கலுார், புதுப்பாளையம் என, ஆறு ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில், இந்த சுகாதார நிலையம் செயல்படுகிறது.தினமும், 200 முதல், 300 பேர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வருகின்றனர்.
ஏராளமான கர்ப்பிணிகள், மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனர்.மருத்துவ கட்டமைப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் 'ரூர்பன்' திட்டத்தில், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் இங்கு, ஒருங்கிணைந்த கட்டட வளாகம் கட்டப்பட்டு, கடந்தாண்டு, ஆக., 30ல் திறக்கப்பட்டது. இந்த கட்டடம் அமைய, அங்குள்ளதனியார் சிலர், நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர்.
இங்கு, 30 படுக்கை கொண்ட வார்டு, குழந்தை பிறப்புக்கு முந்தைய, பிந்தைய சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, கூட்ட அறை என, பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நன்கொடையாளர்கள் சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. நன்கொடையாளர் பங்களிப்புடன், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், சித்த மருத்துவமனை கட்டட விரிவாக்கப்பணியும் நடந்து வருகிறது.ஆனால், தேவையான டாக்டர், செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், இக்கட்டடம் பயன்பாட்டுக்கு வருவதில் இழுபறி நீடிக்கிறது. 'கட்டடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.