அவிநாசி:சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை, கோலம் வாயிலாக, கிராம மக்கள் உணர்த்தினர்.பொங்கல், மாட்டுப்பொங்கல் என, பண்டிகை உற்சாகத்தில் இருந்து மக்கள் மீளவில்லை. குறிப் பாக, விவசாயமும், கால்நடை வளர்ப்பும் நிறைந்துள்ள கிராமப்புறங்களில், பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் நடந்தது. சில கிராமங்களில் வழக்கமான கலை விழாக்களும் கூட பொங்கல் விழாவாக நடத்தப்பட்டன.வீட்டு வாசல், தெருக்கள் தோறும் சாணி தெளித்து, ரங்கோலி, பூக்கோலம், புள்ளிக்கோலம் என, கிராமத்து வீதிகள் கோலங்களின் அணிவகுப்பில் அழ குற காட்சியளிக்கின்றன.இதில், அவிநாசி சேவூர் அருகேயுள்ள மங்கரசு வளையபாளையம், ஆதி திராவிடர் காலனியில் உள்ள சிறுவர், சிறுமியர் கோலம் வரைந்து அதை, கம்பு, ராகி, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்களால் அலங்கரித்திருந்தனர்; இது, பார்வைக்கு புதிதாக இருந்தது.கிராம மக்கள் கூறுகையில், 'ராகி, கம்பு, தினை, சோளம் போன்ற சிறு தானியங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தவை. முன்னோர் காலத்தில் இத்தகைய உணவு தான் அதிகளவில் பயன்பாட்டில் இருந்துள்ளது.முன்னோர்கள், நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்ததற்கு, இத்தகைய உணவு முறைகளை பின்பற்றியதே காரணம் என, எங்கள் பெற்றோர் சொல்ல கேட்டிருக்கிறோம். எனவே தான் சிறு தானியங்களின் முக்கியத்துவம் உணர்த்தும் வகையில் கோலத்தை சிறு தானியங்களால் அலங்கரித்திருக்கிறோம்' என்றனர்.