திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டூவீலர் ஸ்டாண்ட் மூடப்பட்டுள்ளதால், வாகனங்களை நிறுத்த வழியின்றி வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.குறிப்பிட்ட ஆண்டு களுக்கு ஒருமுறை ரயில்வே ஸ்டேஷன் டூவீலர் ஸ்டாண்ட் ஏலம் நடக்கிறது. சேலம் கோட்ட நிர்வாகத்தின் கீழ், அனைத்து பணிகளும் நடப்பதால், ஏலமும் சேலத்தில் நடக்கிறது. ஏலம் எடுப்பவர் திருப்பூரில் வந்து ஆவணங்களை வழங்கும் போதே, இங்குள்ள ரயில்வே அதிகாரிகளுக்கு ஏலம் எடுத்தவர், ஸ்டாண்டை நடத்த போகிறவர் யார் என்பது தெரிகிறது.
அவ்வகையில், பழைய ஒப்பந்தம் எடுத்தவர் ஒப்பந்த காலம் கடந்தாண்டு இறுதியில் முடிந்து வெளியேறினர். திருப்பூரில் உள்ள அதிகாரிகளுக்கு இவ்விபரம் தெரியவில்லை. ஏலம் நடைபெறாததால், டூவீலர் ஸ்டாண்ட் மூடப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் 'தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்டாண்ட் மூடப்பட்டுள்ளதாக' அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
முதல் பிளாட்பார்மில் ரயில் ஏற வருவோர், டூவீலர் ஸ்டாண்டில் வாகனம் நிறுத்த முடியாமல், இரண்டு கி.மீ., சுற்றி புஷ்பா ரவுண்டா அருகே (இரண்டாவது பிளாட்பார்ம்) ஸ்டாண்டுக்கு செல்கின்றனர். அங்கு ஏற்கனவே வாகனங்கள் நிறைந்து இருப்பதால், வேறு ஸ்டாண்டுக்கு செல்ல அறிவுறுத்துகின்றனர்.குடும்பத்துடன் ஊருக்கு ரயிலில் செல்ல வந்தவர்கள், ரயில் வரும் நேரம் வந்த பின், வாகனங்களை விட்டு செல்ல வழியில்லாமல் கடைசி நேரத்தில் தடுமாறுகின்றனர். முதல் பிளாட்பார்மில் குமரன் நினைவிடம் அருகே உள்ள டூவீலர் ஸ்டாண்ட் திறக்க தேவையான ஏற்பாடுகளை, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள், சேலம் கோட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.