பல்லடம்:கொரோனா அதிகரித்து வருவதால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன்படி, பஸ்களில், 50 சதவீத பயணிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்லடம் அருகே, கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.வாவிபாளையம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ''வாவிபாளையத்தை சுற்றி குள்ளம்பாளையம், கோட்டப்பாளையம், கழுவேரிபாளையம், மந்திரிபாளையம், முத்துார், பழனிகவுண்டம்பாளையம், கொசவம்பாளையம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சார்ந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதற்காக, கிராம மக்கள் பலரும் அரசு பஸ்களை நம்பியே சென்று வருகிறோம்.அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக, பஸ்களில், 75 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். கிராமப் பகுதிகளுக்கு ஓரிரு பஸ்கள் மட்டுமே வருகின்றன. அதிலும், குறைந்த பயணிகள் மட்டுமே அனுமதிப்பதால், மீதமுள்ள பயணிகள் பஸ் ஏற இடமின்றி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.உரிய நேரத்தில் வேலை மற்றும் இதர பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். இதனால், வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. அரசு விதித்த கட்டுப்பாடுகளை மதிக்கிறோம்.அதே நேரத்தில், கூடுதல் பஸ்களை அனுமதித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பதால், அரசு இது குறித்து ஆலோசித்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.