அவிநாசி:''பெரியாயிபாளையம் கிராமத்தில், பள்ளியையொட்டி பூங்கா உருவாக்கப்பட வேண்டிய இடத்தில், மரக்கன்றுகள் அகற்றப்பட்டு வருகின்றன'' என்று தன்னார்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சி, பெரியாயிபாளையம் கிராமத்தில், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது; 1,400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.பள்ளி வளாக தடுப்புச்சுவரையொட்டி, தன்னார்வலர்கள் சார்பில், மரக்கன்று நடப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, 'அந்த மரக்கன்றுகளை அப்புறப்படுத்த வேண்டும்' என, பள்ளி நிர்வாகம் கூறி வருகிறது.அப்பகுதி தன்னார்வலர்கள் சிலர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு ;மரக்கன்றுகள் பள்ளிக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், நேரில் வந்து, மரக்கன்றுகளை பார்த்து, கள நிலவரம் அறிந்து அதன்பின் முடிவெடுக்க வேண்டும். மரக்கன்றுகளை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, பள்ளிக்கு முன், கழிவுநீர் தேங்கியுள்ள குட்டையை சுத்தம் செய்ய வேண்டும்.அதனருகே உள்ள இடத்தில் குப்பை கழிவு கொட்டப்படும் செயலை தவிர்த்து, அங்கு பூங்கா அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.