பல்லடம்:ஆண்டுதோறும் பழநியில் நடைபெறும் தைப்பூச விழாவில், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.அவ்வாறு, மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பலர், குடும்பத்துடன், உறவினர்கள் நண்பர்களுடன் பாத யாத்திரை பயணம் மேற்கொள்கின்றனர்.கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, நாளை (18ம் தேதி) நடக்கும் தைப்பூச விழாவுக்கு, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையை தொடர்ந்து வருகின்றனர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பாத யாத்திரை பக்தர்களுக்கு, பல்லடம் முக்கிய வழித்தடமாக உள்ளது.நாளை தைப்பூச விழா நடைபெற உள்ள சூழலில், என்.எச்.,ரோடு, தாராபுரம் ரோடு வழியாக ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக, பழநிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர்.ஆண்டுதோறும், பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக, வழித்தடங்களில் பந்தல்களும், குடிநீர், அன்னதானம் உள்ளிட்ட வசதிகளும், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் செய்யப்படும்.இம்முறை, ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த வசதிகள் செய்யப்படவில்லை. இருந்தும், ஏராளமான பக்தர்கள் எதையும் பொருட்படுத்தாமல் பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.