திருப்பூர்:திருப்பூரில், 18 பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு உட்பட்டு, மொத்தம் 470 சாய ஆலைகள் இயங்குகின்றன. சாய ஆலைகளில் வெளியேறும் கழிவுநீர், பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. பொதுசுத்திகரிப்பு மையங்கள், வாரத்தின் அனைத்து நாட்களும், முழு நேரமும் ஓய்வின்றி இயங்கி, சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கின்றன. பொங்கல், தீபாவளி பண்டிகை நாட்களில் மட்டுமே சுத்திகரிப்பு மையங்களுக்கு ஓய்வு கிடைக்கிறது.கடந்த 13ம் தேதி போகியுடன் பொங்கல் பண்டிகை துவங்கியது. இதையடுத்து, சாய ஆலைகளும், பொதுசுத்திகரிப்பு மையங்களும் இயக்கத்தை நிறுத்திவைத்துள்ளன. பொங்கல் விடுமுறை முடிந்துள்ளது; நுால் விலை உயர்வை கண்டித்து, இன்றும், நாளையும் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.இந்நிலையில், சுத்திகரிப்பு மையங்கள், பராமரிப்பு பணிகளை துவக்கியுள்ளன. மோட்டார்களை சரி செய்தல், சேதமடைந்த குழாய்களை மாற்றுதல் போன்றவற்றுடன், கழிவுநீர் தேக்க தொட்டிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள், சுத்திகரிப்பு மையங்கள், சிறப்பாகவும், தடையின்றி இயங்க கைகொடுக்கும்.பராமரிப்பு பணிகள் முடிந்து, வரும் 20ம் தேதி முதல் சுத்திகரிப்பு மையங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்க உள்ளன.