பல்லடம்:பல்லடம் ஒன்றியம், பருவாய் ஊராட்சி சங்கோதிபாளையம் செல்லும் ரோடு புதுப்பிக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது. பணிகள் துவங்கிய நிலையில், ஜல்லிகள் கொட்டப்பட்ட பின் கிடப்பில் போடப்பட்டது.அப்பகுதியினர் கூறுகையில், 'பருவாய் கிராமத்தில் இருந்து சங்கோதி பாளையம் செல்லும் ரோடு, விமான நிலையம் அருகே உள்ள ரோட்டை இணைக்கிறது. இப்பகுதியில் விளை நிலங்கள், விசைத்தறி கூடங்கள், நுால் மில்கள் உள்ளிட்டவை உள்ளன. இதன் காரணமாக, அதிகப்படியான வாகனங்கள் இவ்வழியாக வந்து செல்கின்றன. நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோடு, கடந்த ஆண்டு ஏப்., மாதம் புதுப்பிக்க வேண்டி பூமி பூஜை போடப்பட்டது. ஜல்லிகள் கொட்டப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறி ரோடு பணி கிடப்பில் போடப்பட்டது.ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு பணியை மேற்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. பணிகளை கிடப்பில் போட்டுள்ளதால், வாகனங்கள் இவ்வழியாக தடுமாறி சென்று விபத்துக்குள்ளாகி வருகின்றன. 2021ல் துவங்கிய ரோடு பணி, வரும் ஏப்., மாதம் வந்தால் ஓராண்டு நிறைவு பெறுகிறது' என்றனர்.