திருப்பூர்:திருப்பூரில், நிட்டிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின.தாராபுரத்தை சேர்ந்தவர் பூபாலகிருஷ்ணன், 36. இவரும், அவரது தம்பி ராஜகோபாலும் சேர்ந்து, திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயா, பாரதி நகரில் நிட்டிங் நிறுவனம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை, நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்த தகவலின் பேரில், இருவரும் விரைந்து சென்றனர். அப்போது, நிறுவனத்தின் உள்ளே தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.தகவலறிந்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உள்ளே இருந்த பொருட்கள் மீது, தீ மளமளவென பரவி எரிந்து கொண்டிருந்தது. நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள நுால்கள், துணிகள், நிட்டிங் மெஷின், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமானது. வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.