ஊட்டி:ஊட்டியில் அவசர தேவைகளுக்காக வந்த சுற்றுலா மற்றும் பிற வாகனங்களை போலீசார் நிறுத்தி விசாரணைக்கு பின் அனுமதி வழங்கினர்.மாநிலம் முழுவதும் நேற்று ஊரடங்கு கடைபிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா மாவட்டமான நீலகிரி முழுவதும், காலை முதல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் அனைவரும் விடுதி; ஓட்டல்களில் முடங்கினர். சில உணவகங்களில் 'பார்சல்' வழங்கப்பட்டதால், அதனை வாங்க மட்டும் அவ்வப்போது, சில வாகனங்கள் வந்தன. சேரிங்கிராஸ் பகுதியில், அவற்றை நிறுத்தி விசாரணை செய்த போலீசார், உணவு கிடைக்க உதவி புரிந்தனர். மேலும், கோவை விமான நிலையம்; ரயில் நிலையங்களுக்கு செல்பவர்களுக்கு அனுமதி அளித்தனர். உள்ளூர் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியதால், சாலையில் ஒரு சிலர் மட்டும் அவசர தேவைகளுக்கு நடமாடினர். இதனால், அதனைத்து சாலைகளும் வெறிசோடி காணப்பட்டன.* நீலகிரி-கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடி; கேரளா எல்லையான நாடுகாணி சோதனை சாவடிகள், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. கனரக லாரிகள் மட்டும் இயக்கப்பட்டது. இரும்புபாலம் பகுதியில், கூடலுார் தாசில்தார் சித்தராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜந்திரன் உட்பட அதிகாரிகள் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.