கடலுார : கடலுார் நகர மக்களின் வரப்பிரசாதமாக, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மஞ்சக்குப்பம் மைதானம் பராமரிப்பின்றி குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடலுார் நகரின் மையப்பகுதியில் விஸ்தாரமான பரப்பளவில் மஞ்சக்குப்பம் மைதானம் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள இந்த மைதானத்தில் அரசியல் கட்சிகளின் மாநாடு, தனியார் கண்காட்சிகள், பொருட்காட்சிகள், சர்க்கஸ் உள்ளிட்டவை நடத்தப்படுவது வழக்கம்.இந்த மைதானம் ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கியும், மாநகராட்சி குப்பை கொட்டும் இடமாக மாறியும், சுகாதாரச் சீர்கேட்டை சந்தித்து வருகிறது. மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை மீண்டும் கொட்டுவதற்கு ஏதுவாக ஏற்கனவே இருந்த குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று தீயிட்டு எரித்தனர்.
இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. கடலுாரில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் சாலை விரிவாக்கம், கட்டுமானம், வடிகால் வாய்க்கால் அமைத்தல் ஆகிய பணிகளில் சேகரமாகும் கழிவு களை கொட்டவும், ஜல்லி, சிமென்ட் கலவை கொட்டி வைக்கும் இடமாகவும், மைதானத்தின் ஒரு பகுதியில் சிமென்ட் கலவை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
சுகாதார சீர்கேடுவிஸ்தாரமான மைதானத்தை சுற்றிலும் அரசு சார்பில், பாபு கலையரங்கம் கட்டப்பட்டு மாநகராட்சி குப்பை வண்டிகள் நிறுத்தப்படுகிறது. பழைய கலெக்டர் அலுவலக கடைகள், வாகன நிறுத்தங்கள் என, ஆக்கிரமித்துள்ளன. மைதானத்தில் குறுக்கும் நெடுக்குமாக சாலைகள் வீணாக்கப்பட்டுள்ளன.பொதுக் கூட்டங்கள் நடத்த மேடைகள் அமைக்கப்பட்டு, அவைகளும் பராமரிப்பின்றி வீணாக்கப்பட்டுள்ளன.
மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. நகரின் பிரதான பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் வழி என்ற நிலையிலும் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மக்களுக்கு பாதிப்பின்றி குப்பையை கொட்ட மாநகராட்சி அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.திறந்தவெளி பார் மாலை நேரத்தில் வயதானவர்கள், அலுவலக ஊழியர்கள், இளைஞர்கள் என பலரும் இங்கு வந்து காற்று வாங்கிச் செல்வது வழக்கம்.
தற்போது இந்த மைதானத்தில் மாலை 7:00 மணி ஆகி விட்டால் "திறந்தவெளி பாராக' மாறி விடுகிறது.குடிப்பிரியர்கள் மதுபாட்டில்கள், தின்பண்டங்கள், தண்ணீர் பாக்கெட்டுகளுடன் மைதானத்திற்குள் வந்து இயற்கைச் சூழலில்அமர்ந்து மது அருந்துகின்றனர்.
அவர்கள் உபயோகித்த பாட்டில்கள், கேரி பேக்குகள், காலியான தண்ணீர் பாலிதீன் பாக்கெட்டுகள் வீசிச் செல்கின்றனர்.அத்துடன், அங்குள்ள ஹைமாஸ் விளக்கும் சரியாக எரியாததால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கும் பஞ்சமில்லை. போலீசார் அதுபற்றி கண்டுகொள்வதில்லை.
நகரின் மையப்பகுதியில் வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் கடலுாருக்கு வரபிரசாதமாக அமைந்துள்ள மைதானத்தை, ஆக்கிரமிப்பாளர் பிடியில் இருந்து மீட்டு, சுகாதார சீர்கேடு இல்லாமல் முறையாக பராமரித்து, இழந்த பெருமையை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.