பண்ருட்டி : பண்ருட்டி அருகே இருதரப்பினர் தாக்கி கொண்டதில் இருவரை புதுப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் கெடிலம் ஆற்றில் காணும் பொங்கலை முன்னிட்டு தீர்த்தவாரி நடந்தது.
அப்போது தாழம்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த நீலமேகம்,24; உட்பட 6 பேர் நேற்று காலை 7 மணிக்கு டிரம்ஸ் மேளம் அடித்து கபடி விளையாடினர். அப்போது சிறுவத்துார் திடீர்குப்பத்தை சேர்ந்த ஜெயராமன்,20; என்பவர் அங்கிருந்த டிரம்ஸ் மேளத்தை அடித்தார். நீலமேகம் உள்ளிட்டோர் ஏன் டிரம்ஸ் அடிக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு, நீங்கள் ஏன் எங்கள் ஊருக்கு வந்தீர்கள் என ஜெயராமன் கேட்டார். இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இதில் காயமடைந்த தாழம்பட்டு தங்கமணி,13; தினகரன்,18; மதிவாணன்,20; நீலமேகம்,24; நவீன்,23; சம்பத்,19; ரிவாக்,19; ஆகியோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நீலமேகம்,24; கொடுத்த புகாரின் பேரில் திடீர்குப்பம் ஜெயராமன்,20; காமராஜ்,22; புஷ்பராஜ், கார்த்திக், கிருஷ்ணராஜ், அரிகோவிந்தன் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ஜெயராமன்,20; காமராஜ்,22; ஆகியோரை கைது செய்தனர். மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர்.