தேனாம்பேட்டை : தேனாம்பேட்டை மண்டலத்தில் உடைக்கப்பட்ட மழை நீர் வடிகாலால், அதன் அருகே உள்ள போலீஸ் பூத் கட்டடம் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை மண்டலம் 123வது வார்டு திருவள்ளுவர் சாலையில் போலீஸ் பூத் அமைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில், இத்தெருவில் தண்ணீர் தேங்கியது.இதையடுத்து, தேங்கிய மழை நீர் வடிந்து செல்ல, போலீஸ் பூத் அருகே உள்ள மழை நீர் வடிகாலை, மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி., உதவியுடன் உடைத்தனர்.தற்போது, மழை ஓய்ந்த நிலையில், மழை நீர் வடிகால் சீர் செய்யப்படாமல் உள்ளது.
இதனால், போலீஸ் பூத் கட்டடத்தின் சுவர் சரிந்து விழும் அபாயம் உள்ளது.மழை நீர் வடிகாலில் கழிவுநீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இத்தெரு முதல்வர் ஸ்டாலின் வீட்டின் பின் பகுதியில் வருவதால், முதல்வர் வீட்டிற்கு பாதுகாப்பிற்கு வரும் போலீசார், அவர்களது வாக்கி டாக்கிகளை சார்ச் செய்ய இந்த மையத்திற்கு தான் வருகின்றனர்.
இதையடுத்து, உடைக்கப்பட்ட மழை நீர் வடிகாலை சீர் செய்ய, மாநகராட்சி அதிகாரிகளிடம் போலீசார் மற்றும் பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர்.ஆனால், அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளதால் குற்றஞ்சாட்டுகின்றனர். போலீஸ் பூத் கட்டடம் சரிந்து விழும் முன், மழை நீர் வடிகாலை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.