விழுப்புரம் : 'விழுப்புரம் மாவட்டத்தில், முழு ஊரடங்கின்போது, பொதுமக்கள் தேவையின்றி வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்' என எஸ்.பி., ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி, தேவையின்றி வெளியே வருவோரை கண்காணித்து வழக்குப்பதிவு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகே, போலீசார் சோதனை மேற்கொண்டதை ஆய்வு செய்த எஸ்.பி., ஸ்ரீநாதா கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி, 63 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இப்பணியில் 1,300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.முக்கியமாக, புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி, கடற்கரை பகுதிகளான கோட்டக்குப்பம், ஆரோவில், மரக்காணம் பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதற்காக, போலீசார் மூலம் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த ஊரடங்கிற்கு, நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளில் இருந்து கொண்டு, தேவையின்றி வெளியே வராமல் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீறி வெளியே வந்தால் வழக்குகள் பதிவதோடு, அபராதம் வசூலிக்கப்படும்' என்றார்.