முழு ஊரடங்கிலும் இறைச்சி விற்பனை அமோகம்!.. கிராமப்புற கடைகளில் குவிந்த கூட்டம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
முழு ஊரடங்கிலும் இறைச்சி விற்பனை அமோகம்!.. கிராமப்புற கடைகளில் குவிந்த கூட்டம்
Added : ஜன 17, 2022 | |
Advertisement
 

செஞ்சி : காணும் பொங்கலையொட்டி, இறைச்சி வாங்க நகர பகுதியைச் சேர்ந்தவர்கள் கிராமப்புற கடைகளை நோக்கிப் படையெடுத்ததால் கிராமங்களில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலை மோதியது.தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை கடந்த 14ம் தேதி கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 15ம் தேதி மாட்டுப் பொங்கலும் நேற்று, பொங்கல் பண்டிகையின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது.காணும் பொங்கல் தினத்தன்று, அசைவ பிரியர்கள் இறைச்சி உணவு சமைத்து சாப்பிடுவது. உறவினர்களை சந்தித்து ஆசி பெறுவது. அவர்களிடமிருந்து அன்பளிப்பு மற்றும் புத்தாடை பெறுவது மற்றும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பது வழக்கம்.இந்த ஆண்டு காணும் பொங்கல் தினமான நேற்று கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேரங்களில் ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முழு ஊரடங்கு என்பதால் காணும் பொங்கல் பண்டிகை உற்சாகமின்றி களையிழந்தது. மாவட்டம் முழுவதும் மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் அசைவ பிரியவர்கள் அசைவம் சமைத்து சாப்பிடுவதை கைவிடவில்லை. கிராமங்களில் நான்கு, ஐந்து குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து வெள்ளாடு வாங்கி வெட்டி பகிர்ந்து கொண்டனர். ஏரி, குளங்களில் மீன் பிடித்து ஆங்காங்கே விற்பனை ஜருராக நடந்தது.அதுமட்டுமின்றி, கிராமப் புறங்களில் இயங்கி வரும் அனைத்து இறைச்சி கடைகளும் நேற்று வழக்கம் போல் செல்பட்டன

.ஊரடங்கால் நகர பகுதியில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால், இறைச்சி கடைகள் மூடியிருந்தன. புறநகர் பகுதிகளில் சில கடைகள் இயங்கின. இருப்பினும், இறைச்சிக் கடைக்காரர்கள் இறைச்சிகளை பார்சல் செய்து, போன் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்கு நேரில் எடுத்துச் சென்று விநியோகித்தனர்.நகரபுற கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் ஏராளமானோர் போலீஸ் சோதனை இல்லாத கிராம சாலை வழியாகச் சென்று, ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டனர்.இதனால், கிராமப்புற இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. கிராமங்களில் போலீஸ் கெடுபிடி இல்லை என்பதால் விற்பனையும் அமோகமாக நடந்தது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X