வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பயணிக்க, இன்று முதல் வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வாயிலாக, -வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு உள்ளது
.மொத்தம், 2,156 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு கட்டங்களாக இந்த சாலை பணிகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வர் பழனிசாமியால், சாலை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த வெளிவட்ட சாலையானது சென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலுார், தாம்பரம், பூந்தமல்லி, நெமிலிச்சேரி, செங்குன்றம், மீஞ்சூர் பகுதிகளை இணைக்கிறது.பொன்னேரி - -திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் துவங்கி, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முடிகிறது. மேலும், சென்னை - திருப்பதி, சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.இந்த சாலையில் இதுவரை வாகனங்கள் சுங்கக் கட்டணம் இன்றி பயணித்தன. தற்போது சின்னமுல்லைவாயல், நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, முடிச்சூர் ஆகிய இடங்களில், நான்கு சுங்க கட்டண வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஐந்து பாதைகள் உள்ளன. ஒன்று வி.ஐ.பி., மற்றும் அவசர வாகனங்கள் செல்லவும், மூன்று பாதைகளில் பாஸ்டேக் வசதியும், ஒன்றில் பணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 10ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.பாஸ்டேக் வாயிலாக பணம் பெறுவதில் தொழில்நுட்ப சிக்கல் இருந்ததால், கட்டணம் வசூலிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல், சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.கோளாறுகள் சரி செய்யப்பட்டு, இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூரில் இருந்து வண்டலுார் செல்ல குறைந்தபட்சம் இலகு ரக வாகனங்களுக்கு 109 ரூபாயும், அதிகபட்சமாக பெரிய டிரக் வாகனங்களுக்கு 702 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -