திண்டுக்கல், : கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழு ஊரடங்கு அமலானதால் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து இயங்காமல், கடைகள் அடைக்கப்பட்டு நகரங்கள் வெறிச்சோடின.
நேற்று முன்தினம் (ஜன.15) இரவு 10:00 மணி முதல் இன்று (ஜன.17) காலை 5:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் திண்டுக்கல்லில் பஸ்டாணட், மார்கெட் மற்றும் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. மருந்தகம், பால், பத்திரிகை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது.ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றுவோரை கண்காணிக்க முக்கிய சாலைகளில் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சரக்கு வாகனங்கள், மருத்துவம்,அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் அனுமதிக்கப்பட்டனர்.
பழநியில் இன்று தைப்பூச திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு அறிவித்ததால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி நகரே வெறிச்சோடியது. அடிவாரம் பகுதியில் பாதயாத்திரை பக்தர்கள் மிகச்சிலரே வந்திருந்தனர். அவர்கள் கோயில் வாயிலில் நின்று தரிசனம் செய்து சென்றனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய நபர்களை போலீசார் எச்சரித்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது. விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வராததால், காலை முதல் நள்ளிரவு வரை சுறுசுறுப்புடன் காணப்படும் மார்க்கெட் வெறிச்சோடியது. கடந்த ஞாயிறன்று தடையை மீறி மார்க்கெட் செயல்பட்டதால் மார்க்கெட்டிற்குள் திறந்திருந்த கமிஷன் கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது. இதனால் நேற்று அனைத்து கமிஷன் கடைகளும் மூடப்பட்டு இருந்தது. வர்த்தகம் நடைபெறவில்லை.