ஒரு காலத்தில் மக்கள் நெடுந்துஆர பயணங்களை மேற்கொள்ளும் போது கடுமையான வெயிலை சந்திக்க நேர்ந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர். இதுபோன்ற காலகட்டங்களில்தான் நெடுந்துார பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் சிரமமின்றி பயணத்தை மேற்கொள்ள, மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது.
அக்பர் ரோட்டோரங்களில் மரக்கன்றுகளை நட்டார் என்பதை வரலாற்று பாடங்களில் படித்துள்ளோம். அந்த அடிப்படையில் மரக்கன்றுகளை நட முடிவு செய்த போது எந்த வகையான மரக்கன்றுகளை நடலாம் என்பதை யோசித்து புளிய மரங்களை நட்டனர். மரங்களிலேயே சிறந்த வலுவான மரம் எதுவென்றால் தேக்கு மரத்திற்கு பின் புளியமரம் தான்.
அதுமட்டுமல்ல அடர்த்தியாக வளரக்கூடிய புளியமரம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அனைத்து இடங்களிலும் புளிய மரங்களை நட்டு வைத்தனர். இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்த பின்பு ஒரு குகைக்குள் செல்கின்ற உணர்வு, பயணங்களை மேற்கொள்ளும் மக்களுக்கு தோன்றும். உடல் சோர்வின்றி உரிய இடத்திற்கு சென்ற காலம் ஒரு காலம்.
ரோடு அகலப்படுத்தும் பணிக்காக மரங்களை வெட்டினாலும் பல்வேறு இடங்களில் இருபுறங்களிலும் புளியமரங்கள் அழகாகவும் குகைக்குள் செல்கின்ற உணர்வோடு இருக்கின்றன. மரங்களை வெட்டுவதால் இயற்கை பேரிடர்கள் உருவாகிறது என்பதை உணர்ந்து , மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு பலரை ஆர்வப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் காரியாபட்டி கரியனேந்தல், கணக்கனேந்தல் ரோட்டில் இருபுறங்களிலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு வேம்பு , புங்கை, பூவரசு, புளியன் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தற்போது இதனை பார்க்கும் போது அழகாகவும் நேர்த்தியாகவும், வளர்ந்து, பாதசாரிகள் இளைப்பாறும் வகையில் நிழல் தருகிறது என்பதை நினைக்கும் போது பழைய காலம் நினைவுக்கு வருகிறது. ஊரின் அடையாளங்களும் மாறி, ஏதோ மலைக் கிராமங்களுக்குள் செல்கின்ற உணர்வை தருவதால் பலரும் பெருமைப்படுகின்றனர்.