புதுச்சேரி : புதுச்சேரி அரசு துறைகளில், 'அவுட் சோர்சிங்' எனப்படும் அயலக சேவையில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு, நிதித்துறை கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி அரசு துறைகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.இதுமட்டுமின்றி, 'அவுட் சோர்சிங்' எனப்படும் அயலக சேவை வாயிலாக, தனியார் நிறுவன பணியாளர்கள் மூலமும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக, அரசு நிறுவ னங்களில் ஹவுஸ்கீப்பிங், பராமரிப்பு, செக்யூரிட்டி போன்ற பணிகள் 'அவுட் சோர்சிங்' மூலம் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் செலவிடும் ஊதியம், சம்பள உயர்வு, சலுகைகள், ஓய்வூதியம் என எல்லாவற்றையும் கணக்குபோட்டு பார்க்கும் அரசு துறைகள், தற்போது அவுட்சோர்சிங் மூலமே அனைத்து பணிகளையும் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.அரசு ஊழியர்களுக்கு செலவிடும் தொகையை ஒப்பிடும்போது அவுட்சோர்சிங் செலவுத்தொகை குறைவாக உள்ளது.
எனினும், அயலக பணிக்கும் ஆண்டுதோறுக்கு பல கோடி ரூபாயை அரசு செலவழித்து வருகிறது.இந்நிலையில், மாநில அரசு துறைகளின் அயலக சேவையில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள நிதித்துறை முடிவு செய்து, கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.பொதுவாக, அரசு துறைகளில் சேவை பணிக்காக அவுட் சோர்சிங் விடும்போது குறைந்த தொகை கோரிய நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்படும். அதன் பிறகு, அயலக பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்திற்கு மாதந்தோறும் 'பில்' செட்டில் செய்யப்படும்.
இருப்பினும் தற்போதுள்ள டெண்டர் வழிமுறைகளில், ஒரு கட்டடத்திற்கு எவ்வளவு பேர் நியமிக்க வேண்டும் என்ற வரையறை இல்லை.குத்து மதிப்பாக இவ்வளவு பேர் வேண்டும்என, ஒவ்வொரு துறையும் 'அவுட் சோர்சிங்' விடுகின்றன. துறைத் தலைவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப, தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கை மாறுபடுகிறது. இந்த பழங்காலத்து முறையை மாற்ற வேண்டும் என, நிதித்துறை அனைத்து துறைகளுக்கும் தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.அதில், 'அவுட்சோர்சிங் சேவைக்காக விடப்படும் அரசு கட்டடத்தின் மொத்த பரப்பளவு என்ன, அங்கு எவ்வளவு பேர் தேவைப்படுவர், ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு பரப்பு கண்காணிக்க முடியும்
அல்லது துப்புரவு பணி செய்ய முடியும் என்பதை எல்லாம் விஞ்ஞான ரீதியில் கணக்கிட வேண்டும்.அதன் அடிப்படையில், தேவைப்படும் ஆட்களை மட்டும் அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்த வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.நிதித்துறையின் இந்த புதிய உத்தரவின் மூலம், அவுட்சோர்சிங் பணிக்கு மாதந்தோறும் இனி எவ்வளவு செலவழிக்க வேண்டும் என, அரசு துறைகள் துல்லியமாக கணக்கீடு செய்ய உள்ளன.
துறை இயக்குனர்கள் மாறினாலும், இனி ஒரே மாதிரியாக தான் அவுட்சோர்சிங்கில் ஆட்களை நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.நிதித் துறையின் கிடுக்கிப்பிடி உத்தரவினை தொடர்ந்து, அரசு துறைகள் அனைத்தும் புதிய விதிமுறைகளின்படி அவுட்சோர்சிங் விட தயாராகி வருகின்றன. அதற்காக, அலுவலக கட்டடத்தின் பரப்பளவினை கணக்கிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன
.குழப்பம் இனி இருக்காதுஅவுட் சோர்சிங் முறையில் டெண்டர் கோரும் போது பல நிறுவனங்கள் ஒரே தொகை குறிப்பிட்டால் யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. புதிய முறையின்படி நிறுவனங்கள் குறிப்பிடும் ஆட்கள் எண்ணிக்கையை வைத்து, டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடும். அதனால், இனி குழப்பம் இருக்காது.