மதுரை : மதுரை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் நியமனம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால் தள்ளிபோகிறது. ஐம்பது சதவீத பணியிடங்கள் காலியாகவுள்ளதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் புலம்பினர்.
இம்மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் 1440க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் சத்துணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி மையத்திலும் தலா ஒரு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இருக்க வேண்டும். ஆனால் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் மட்டும் 600 க்கும் மேல் காலியாகவுள்ளன. சமையலர், உதவியாளர் பணியிடங்களும் அதே எண்ணிக்கையில் காலியாகவுள்ளன.
இப்பணியிடங்களை நிரப்ப 2017ல் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன் எதிரொலியாக எட்டாயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு மூன்று நாட்கள் நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் அரசியல் தலையீடு எதிரொலியாக நியமனம் கிடப்பில் போடப்பட்டது. அந்த நியமன அறிவிப்பை 2021ல் ரத்து செய்த மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். ஆனால் சட்டசபை தேர்தல் எதிரொலியாக அந்த நியமனமும்கிடப்பில் போடப்பட்டது.சில நாட்களுக்கு முன் 2வது முறை வெளியான அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டது. புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில் பணியில் உள்ளவர்கள் ஓய்வு பெற்று வருவதால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக ஊழியர்கள் புலம்பினர்.மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. அதன் பிறகே சத்துணவு ஊழியர் நியமன அறிவிப்பு வெளியாகும் என்றார்.