பொன்னேரி : புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவு நீர் தொட்டியில் விழுந்த நாய் குட்டியை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.பொன்னேரி, திருவேங்கிடபுரம், தசரதன் நகர் பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில், கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் தாயுடன் சுற்றித் திரிந்த நாய்குட்டி ஒன்று, இந்த தொட்டியில் தவறி விழுந்தது.தாய் நாய், இரவு முழுதும் தொட்டியின் அருகில் நின்றபடி குரைத்தபடி இருந்தது.
நேற்று காலை, குடியிருப்புவாசிகள் நாய் தொடர்ந்து குரைத்தபடி இருப்பதை கண்டு, தொட்டியின் உள்ளே பார்த்தபோது, குட்டி நாய் விழுந்து இருப்பதை கண்டனர்.இது குறித்து பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சம்பத் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர்.கயிற்றின் மூலம் தொட்டியின் கீழ் பகுதிக்கு இறங்கி, குட்டி நாயை பாதுகாப்பாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் குட்டி நாய், தாய் நாயுடன் அங்கிருந்து சென்றது.தாய் நாயின் பாச போராட்டத்தால், குட்டி நாய் மீட்கப்பட்ட சம்பவம் குடியிருப்புவாசிகளிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.