சென்னை : முழு ஊரடங்கிற்கு முந்தைய நாளில், மார்க்கெட், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், தொற்று அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுதும், இரவு நேர ஊரடங்குமற்றும் ஞாயிறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, ஞாயிறு ஊரடங்கிற்கு முந்தைய நாளான சனிக்கிழமை, அத்தியாவசிய தேவைகளை காரணம் காட்டி, மார்க்கெட், சந்தைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கட்டுபாடின்றி கூடும் கூட்டத்தால் கொரோனா பரவும் அச்சம் எழுந்துள்ளது.தவிர, ஞாயிறுகளில் கடற்கரை செல்லும் குடும்பத்தினர், சனிக்கிழமையேகடற்கரைகளை நோக்கி படையெடுப்பதால்,மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்படும் ஞாயிறு முழு ஊரடங்கே, தொற்று பரவலுக்கு பெரும் காரணமாகி விடும் சூழல் எழுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.தீர்வாக, முழு ஊரடங்கை விலக்கி தினசரி நேர கட்டுப்பாடு, வீட்டருகே பொருட்கள் வாங்க அறிவுறுத்தல், நடமாடும் காய்கறி கடைகள் போன்ற பகுதி அளவிலான ஊரடங்கை கடைப்பிடித்தால், தொற்று பரவல் குறைய வாய்ப்புள்ளது என, பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.