சென்னை : ஊரடங்கால் சாலை மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில், மின்சார ரயில்களில் பயணிக்க, ரயில் நிலையங்களில் பயணியர் குவிந்தனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரண்டாவது வாரமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் சாலை மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.அத்தியாவசிய பணியாளர்களுக்காக மாநகர பஸ்கள் சில வழித்தடங்களில், தனிப்பட்ட முறையில் இயக்கப்பட்டன. இதைத்தவிர்த்து, வாடகை வாகனங்களும் இயக்கப்படவில்லை.ஆனால், மின்சார ரயில் போக்குவரத்து மட்டும் நேற்று இயங்கியது. அதுவும் வழக்கமான ஞாயிறு சேவை போன்று இல்லாமல், குறைந்தபட்ச ரயில்கள் இயக்கப்பட்டன.இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்தவர்கள், வடமாநில தொழிலாளர்கள், அத்தியாவசிய பணிகளுக்காக சென்றவர்கள், சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் குவிந்தனர்.குறிப்பாக, சென்னை மற்றும், சுற்றுப்புற ஏரியாவில் கட்டுமான பணிகள், தொழிற்சாலைகளில், தினக்கூலிகளாக பணிபுரியும் வடமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, ரயில்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று அதிகமானோர் வந்தனர்.
முழு ஊரடங்கால் மாலையில் செல்ல வேண்டிய ரயிலில் பயணம் செய்வதற்கு, நேற்று அதிகாலையிலேயே நிலையம் வந்துவிட்டனர்.ஊரடங்கால் உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால், மதிய சாப்பாடின்றி நிலையம் முன் காத்திருந்த தொழிலாளர்களுக்கு, தனியார் சேவை அமைப்பின் சார்பில் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.