பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, கிணற்றில் தவறி விழுந்தவரை, தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
பொள்ளாச்சி, தேவம்பாடிவலசுவில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த நபர், உயிருக்கு போராடுவதாக, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் வந்தது. தீயணைப்புத்துறை நிலை அலுவலர் (போக்குவரத்து) பிரபாகரன் தலைமையில் வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றில் உயிருக்கு போராடியவரை மீட்க முயற்சிகள் மேற்கொண்டனர்.அவரை கயிறு கட்டி, பொதுமக்கள் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இரண்டு மணி நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டனர்.
வடக்கிப்பாளையம் போலீசார் கூறுகையில், 'தேவம்பாடிவலசுவை சேர்ந்த சுந்தரம், 45, கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. கிணறு அருகே, போதையில் சென்ற போது தவறி விழுந்திருக்கலாம். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,' என்றனர்.