கிணத்துக்கடவு : பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை பகுதிகளில், தக்காளி, வெண்டை, பொரியல்தட்டை, முள்ளங்கி, வெங்காயம், செடிவகை காய்கறி பயிர்களையும், தென்னை மற்றும் பழவகை பயிர்களையும் சாகுபடி மேற்கொள்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தரமான விதைக்குவியல்களை, விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என, விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் அறிக்கை:
ஒவ்வொரு மாத இறுதியிலும், அந்த மாதத்துக்குரிய விதை இருப்பு மற்றும் விற்பனை அறிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும். விதை குவியல் வாரியாக, அடுக்கி வைத்து விற்பனை செய்வதுடன், தாங்கள் வழங்கும் விற்பனை பட்டியலுக்கு உரிய, குவியல் எண் கொண்ட விதைக்குவியல் தான் விவசாயிக்கு வழங்கப்படுகிறதா என உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து விதைகளுக்கும் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். பட்டியல் இல்லாமல் விற்பனை செய்வது, காலாவதியான விதைகளை விற்பனை செய்வது அல்லது இருப்பு வைப்பது, குற்றமாகும். ஆய்வின்போது கண்டு பிடிக்கப்பட்டால், விதை சட்ட பிரிவுகளுக்கு உட்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.