ஆனைமலை : தமிழகம் முழுவதிலும் இளநீர் தேவை அதிகரித்து வருவதால், பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா விவசாயிகள், இளநீர் பண்ணை விற்பனை விலையை உயர்த்தியுள்ளனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், 1.46 லட்சம் ஏக்கரில், ஒரு கோடி தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில், 20 சதவீதம் இளநீர் உற்பத்தி செய்யும் ரகங்களாகும்.இங்கு அறுவடையாகும் இளநீர், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, புதுடில்லி பகுதிகளுக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. தற்போது, நாடு முழுவதிலும் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. இளநீர் வரத்து குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்துள்ளதால், பண்ணை விற்பனை விலையை விவசாயிகள் உயர்த்தியுள்ளனர்.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
தமிழகத்தில் மழை குறைந்து, வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இயல்பை விட, மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. முதியோர், உடல்நிலை பாதிக்கப்பட்டோர் மற்றும் வெயில் பாதிப்பை தவிர்க்க, அதிக அளவில் இளநீர் தேவைப்படுகிறது. அதேசமயம், இளநீர் வரத்து குறைந்து, தேவை அதிகரித்து வருகிறது. இதனால், இந்த வாரம் இளநீர் பண்ணை விற்பனை விலை, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று முதல், ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 18 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடைக்கு விற்பனை செய்தால் ஒரு டன் இளநீர், 6,750 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.கோடை சீசன் துவங்கி, வெயில் அதிகரித்து வருவதால், மார்ச் மாதம் வரையிலும் இளநீர் விலையில் சரிவு இருக்காது, தேவையும் அதிகமிருக்கும். இந்நிலையில், விவசாயிகள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, மார்க்கெட்டில், இடைத்தரகர்கள் 'சிண்டிகேட்' அமைத்து விலையை குறைப்பது தவிர்க்க முடியும்.
இவ்வாறு, தெரிவித்தார்.